Wednesday 10 June 2015

ஏமாற்றுவாதங்கள்!

விடாமுயற்சியைப்பற்றிச்  சொல்லும் பொழுது வழக்கில்,

அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்கள்.

அம்மியை எதற்கு அடிக்க வேண்டும்?

பழமொழி சொன்னால் கேட்க வேண்டும் ஆராயக் கூடாது!

சரி.. சரி... நான் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன்!

இணையத்தில் நாம் என்னதான் விளக்கினாலும், உணர்ச்சி வசப்பட்ட ஒரு சில இஸ்லாமியர்கள் தவிர மற்றவர்கள் கண்டும் காணாதவர்களைப் போல இருக்கின்றனர்.

அந்த சிலரில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமைப்பற்றித் தெரியாதவர்கள்.  தங்களது சொந்தக் கருத்துக்களையெல்லாம் இஸ்லாம் என்ற பெயரில் முன்வைத்து நமது ஆவியை(!) எடுப்பவர்கள்.

புத்திசாலித்தனமாக சிந்த்திப்பவர்களோ, தாங்கள் சொல்லும் மூத்திரச் சந்திற்கு வந்தால் மட்டுமே பதில் சொல்வோமென்று அடம்பிடித்து அறைக்கூவல் விடுபவர்கள்.

என்ன நடந்தாலும் சரி இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் மட்டும் வாயைத் திறக்கவே மாட்டார்கள்!

இவர்களின் அமைதி(!) நம்மைப் போன்றவர்கள் இணையத்தில் முன்வைக்கும் விமர்சனங்கள், உண்மையிலேயே இந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களைச் சென்றடைகிறதா? என்று நாமே சற்று குழம்பிப் போகுமளவிற்கு இருக்கிறது.

இவர்களின் அமைதிக்கு  சில காரணங்கள் இருக்கிறது.

நம்மைப் போன்றவர்களுக்கு ஆலிம்கள் பதில் கூறத் துவங்கினால் நாம் பெரிய ஆளாக ஆகிவிடுவோமாம்!

இவைகளுக்கு பொதுவெளியில் பதிலளிக்கத் துவங்கினால் எதிர்க் கருத்துக்கள் மிக எளிதாக கடைநிலை முஸ்லீம்களையும் சென்றடைந்து விடும் என்ற அச்ச உணர்வு அவர்களைத் தடுக்கிறதாம். இது ஒரு முல்லா என்னிடம் கூறிய பதில்.

ஆனால் கேள்விக்கணைகள் ஓய்ந்ததாகத் தெரியவில்லை.

விளைவு!

அம்மி நகரத் துவங்கியிருக்கிறது.

மாஷா அல்லாஹ்!

பீஜேவின் குர்ஆன் மொழிபெயர்ப்பில் புதிதுபுதிதாக விளங்கங்கள் இணைந்து கொண்டே இருக்கிறது. கூடிய விரைவில் பீஜேவின் குர்ஆன் விளக்கவுரைகளை தனித் தொகுதி வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இன்ஷா அல்லா!


பாவம் அல்லாஹ்!

குர்ஆன் விளக்கமானது(3:128), தெளிவானது(5:15), தெளிவுபடுத்தப்பட்டது(18:54) விவரித்துத் தெளிவாக்கப்பட்டது என்றெல்லாம் அல்லாஹ்(!), தனக்குத்தானே சான்றிதழ்களை வழங்கி கரடியாக கத்துவது எந்த முல்லாக்களின் காதுகளிலும் விழவில்லை! மூடர்கள், குருடர்கள், செவிடர்கள் என்று குர்ஆனில் அல்லாஹ்(!), அழகிய முறையில் வர்ணனை செய்வது இவர்களைத்தான் என்று நினைக்கிறேன்.

நகர்ந்திருக்கும் அம்மியைப்பற்றி சிறிது கவனிக்கலாம்.

குர்ஆன் அறிவியலுடன், வரலாற்றுடன், சமகால நாகரீகத்துடன், மனிதநேயத்துடன் முரண்படுவதுடன் தனக்குத்தானே முரண்படுவதை நாம் அறிவோம். மனிதன் படைக்கப்பட்ட விதத்தை குர்ஆன் கூறும் விதங்கள் அதன் உள்முரண்பாடுகளுக்கு சிறந்த உதாரணங்களில் ஒன்று. அதை விதவிதமாக நமது ஆலிம்கள் விளக்குவதாக நினைத்துக் கொண்டு தங்களது அறியாமையை அவ்வப்பொழுது வெளிப்படுத்துவார்கள். அறியாமை என்று கூறுவதைவிட ஏமாற்றுவாதம் என்று கூறுவது சரி!

பீஜேவின் குர்ஆன் விளக்கவுரைகளில் புதிதாக இணைக்கப்படவுள்ளதாக கூறும் TNTJ வின் அதிகாரபூர்வ இணையதளத்திலிலிருந்து...




இவ்வசனங்களில் (2:117, 3:47, 3:59, 16:40, 36:82, 40:68) அல்லாஹ் ஆகு என்று கட்டளையிட்டு மனிதனைப் படைத்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வசனங்களில் (6:2, 7:12, 15:26, 15:28, 15:33, 17:61, 23:12, 32:7, 37:11, 38:71, 38:76, 55:14) மனிதனைக் களிமண்ணால் படைத்தோம் என்று கூறப்படுகின்றது.
இவ்வசனங்களில் (19:67, 76:1) முன்னர் எந்தப் பொருளாகவும் மனிதன் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இவ்வசனங்களில் (21:30, 25:54, 32:8, 76:2, 86:6) தண்ணீரால் மனிதனைப் படைத்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வசனங்களில் (22:5, 23:14, 40:67, 75:38, 96:2) கருவுற்ற சினைமுட்டையில் இருந்து மனிதனைப் படைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இவ்வசனங்களில் (3:59, 18:37, 22:5, 30:20, 35:11) மண்ணால் உங்களைப் படைத்தோம் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வசனங்களில் (16:4, 18:37, 22:5, 23:13, 23:14, 35:11, 36:77, 40:67, 53:45, 75:37, 76:2, 80:19) மனிதன் விந்துத் துளியில் இருந்து படைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இப்படி குர்ஆன் முரண்பட்டுp பேசுவது ஏன் என்று இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

”கருவுற்ற சினைமுட்டையிலிருந்து” என்ற பீஜேவின் கற்பனையை பலமுறை நாம் விவாதித்திருக்கிறோம் எனவே அதைபற்றி நான் இங்கு விவாதிக்கப் போவதில்லை.  பீஜே என்ன சொல்கிறார் என்பதை தொடர்ந்து கவனிப்போம்.

ஆனால் இதில் எந்த முரண்பாடும் இல்லை. எல்லாமே சரியான கருத்து தான் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இதை ஒரு உதாரணத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
இடியாப்பம் எனும் உணவைப் பற்றி பேசும்போது
நெல்லில் இருந்து இது உருவாக்கப்பட்டது என்றும் கூறலாம்.
அரிசியில் இருந்து இது உருவாக்கப்பட்டது என்றும் கூறலாம்.
மாவில் இருந்து தயாரிக்கப்பட்டது என்றும் கூறலாம்.
அரிசிமாவில் இருந்து தயாரிக்கப்பபட்டது எனவும் கூறலாம்.
தண்ணீர் மற்றும் அரிசி மாவு மூலம் தயாரிக்கப்பட்டது என்றும் கூறலாம்.
என் தாயாரின் முயற்சியால் உருவானது என்றும் கூறலாம்.
இதை முரண்பாடு என்று யாரும் கூற மாட்டார்கள். இதில் எந்த ஒன்றையும் பொய் என்று சொல்ல முடியாது.
பீஜேவின் விளக்கத்தை ஆன்லைன் பீஜேவில்தான் படிப்போம் என்பவர்கள் இணைப்பை சொடுக்கிப் படித்துக் கொள்ளவும்.

குர் ஆனின் உள்முரண்பாடுகள் இடியாப்பச் சிக்கல்தான் என்பதை அறிந்துதான் இதற்கு இடியாப்பத்தை உதாரணமாக கொடுத்திருக்கிறாரோ என்னவோ?
அல்லாஹ்வே அறிவான்!

ஒரு சமையல்காரரிடம் இடியாப்பத்தை எவ்வாறு செய்கிதீர்கள்? என்று கேட்டால் இப்படித்தான் பதில் சொல்வாரா?

அதிலும் மிகத்தெளிவாக எல்லோருக்கும் விளங்கும்வகையில் விவரித்திருப்பதாக கூறிக் கொள்ளும் சமையல்காரர் இப்படித்தான் பதிலளிப்பாரா?

பீஜேவின் இடியாப்பத்தையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். பீஜே மிகபுத்திசாலித்தனமாக தனது விளக்கத்தில் இடியாப்பத்தின் மிக முக்கிய மூலப்பொருளை தவறாது குறிப்பிட்டு குர்ஆனை முட்டுக் கொடுத்து நிறுத்தப்பார்க்கிறார்.

தேறியதா என்பதுதான் இங்கு கேள்வி!

மனிதனின் படைப்பிற்காக குர் ஆன் பட்டியலிடும் மூலப்பொருட்கள்,

மண்

களிமண்

பிசுபிசுப்பான களிமண்

களிமண்ணின் மூலத்திலிருந்து

தட்டினால் ஓசைதரக்கூடிய களிமண்

நீர்

குதித்துக்குதித்து வெளியாகும் நீர்

விந்து

சொட்டுசொட்டாக ஊற்றப்பட்ட நீரிலிருந்து

எந்தப் பொருளாகவும் இருக்காத நிலையிலிருந்து

ஆகுக

ஓர் ஆத்மாவிலிருந்து..

பீஜேவின் ’இடியாப்ப’ உதாரணத்தை குர்ஆனுடன் பொருத்திப்பாருங்கள் பீஜே, இடியப்பத்தின் மூலம் அல்லாஹ்விற்கு முட்டுக் கொடுத்து நிற்க வைக்க எடுத்திருக்கும் பெருமுயற்சிகள் உங்களுக்கே புரியும்.

நெருப்பு அல்லது அதிக வெப்பத்தில் சுடப்படும்பொழுதுதான் களிமண் ஓசை தரக்கூடையதாக மாற்றமடையும்; எனவே மனிதன் நெருப்பினால் படைக்கப்பட்டவன் என்று கூறலாமா?

இடியாப்பம் தண்ணீரால் செய்யப்பட்டது.

குதித்து குதித்து வெளியாகும் நீரிலிருந்து இடியாப்பம் செய்யப்பட்டது

எதுவுமில்லாததிலிருந்து இடியாப்பம் செய்யப்பட்டது.

’குன்’ என்றவுடன் இடியாப்பம் உருவாகிவிட்டது. என்று குர்ஆனுக்கு பீஜே விளக்கம் கொடுக்க வேண்டும்.

இறுதியாக அவர் குறிப்பிட்டிருக்கும் ”என் தாயாரின் முயற்சியால் உருவானது என்றும் கூறலாம்” என்ற பதில் இடியாப்பத்தை உருவாக்கியவர் யார் என்ற கேள்விக்கான பதில்!
எனவே பீஜே இங்கும் சறுக்கி விழுகிறார்.

வானம் என்ற சொல் திருக்குர்ஆனில் இரு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலே தென்படும் வெட்டவெளி என்பது ஒரு அர்த்தமாகும்.
வானத்தில் இருந்து மழையை இறக்கியதாக 2:21, 6:98, 8:11, 13:17, 14:23, 15:22, 16:10, 16:65, 20:53, 22:63, 23:18, 25:48, 27:60, 29:63, 30:24, 31:10, 35:27, 31:21, 43:11, 50:9 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

வானம் என்ற சொல் இரு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறும் பீஜே, மெல்ல நழுவி, இருவகையான வானங்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார்.

...இது அல்லாத இன்னொரு வானத்தைப் பற்றியும் திருக்குர்ஆன் கூறுகிறது. அது மனிதன் இன்னும் சென்றடையாத தொலைவில் இருக்கிறது. ஏழு அடுக்குகளைக் கொண்டதாக அது படைக்கப்பட்டுள்ளது.
...இவ்வாறு ஏழு வானங்கள் உள்ளன. இந்தவானத்தை விஞ்ஞானிகள் இன்னும் அறிவால் கூட அடையவில்லை. இவர்கள் ஆகாயம் எனும் வெட்ட வெளியின் இறுதி எல்லையைக் கூட அடையவில்லை. அது திடப்பொருள் என்றோ திரவப்பொருள் என்றோ இன்னும் அவர்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை.



எனவே வானம் என்பது,

வெட்டவெளியாகவும்,

ஏழு அடுக்குகள் கொண்ட வேறொரு அமைப்பாக,

இருவகைப்படும் என்ற அறிய கண்டுபிடிப்பை மனிதகுலத்திற்கு அறிவிக்கிறார். அவர் கூறுவதற்கு தயங்கினாலும், குர்ஆனைப் பொருத்தவரையில் வானம் என்பது திடப்பொருளாலான ஏழு அடுக்குகளைக் கொண்டது.

வானம் என்றால் என்ன?
நீலநிறத்தில் நாம் காண்கிற வானம் என்பது காட்சிப் பிழை என்கிறது அறிவியல். பூமியைச் சூழ்ந்துள்ள வாயுக்களின் மூலக்கூறுகள் சூரியனிலிருந்து வெளியேரும் அலை நீளம் குறைவான நீல நிற ஒளியை அதிகமாகச் சிதறடிப்பதால் வானம் நமக்கு பகலில் நீல நிறமாகத் தெரிகிறது. இதில் ஒளிஅலைநீளமும், பார்வைக் கோணமும், நமது விழியின் கிரகிக்கும் தன்மையும் கூடுதல் காரணிகளாக அமைகிறது. இதை நாம் துவக்கப்பள்ளி அறிவியல் பாடங்களில் படித்திருக்கிறோம்.
வானம் நமக்கு நீல நிறமாகத் தெரியும் அதேவேளையில் புவியின் வேறுபகுதிகளில் செந்நிறமாக உதயத்திலும், அந்திவேளையிலும், இரவாக இருளுளிலும் இருக்கிறது.

வானத்தைப்பற்றிய குர்ஆன் மற்றும் முல்லாக்களின் உளறல்களை நாம் முன்பே மிக விரிவாக விவாதித்திருக்கிறோம். குர்ஆன் மட்டுமல்ல பீஜேவும் தனக்குத்தானே எவ்வாறெல்லாம் முரண்படுகிறார் என்பதை இந்த இணைப்பை  சொடுக்கினால் உங்களுக்கே புரியும்.

அறிவுள்ள மனிதர்கள், மூடத்தனமான கருத்துக்களின் மீது கொண்டிருக்கும் வெறித்தனமான பற்று அவர்களை எவ்வாறெல்லாம் சிந்திக்க வைக்கிறதென்பதற்கு பீஜேவின் விளக்கங்கள் சிறந்த உதாரணம்!


தஜ்ஜால்