Sunday 15 January 2017

முஹம்மதியம் கற்பிக்கும் பெண்ணுரிமை!-2

காதல் திருமணத்தை முஹம்மதியம் ஏற்றுக் கொள்கிறதா?

ஆம்…! ஏற்றுக் கொள்கிறது.

ஆண்களுக்கும், வழக்கம் போல முஹம்மதுவிற்கு அனைத்து விதத்திலும் அனுமதிக்கிறது.

அல்லாஹ் திருமணம் செய்து கொள்வது பற்றி கூறுகின்றான்:
“பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக திருமணம் செய்துகொள்ளுங்கள்.” [அல்குர்ஆன் 4:3]
இங்கு உங்களுக்கு விருப்பமானவர்களை என்று கூறியதிலிருந்து ஒரு பெண் மீது விருப்பம் ஏற்ப்பட்டு பின்பு அவளைத் திருமணம் செய்வதை அல்லாஹ் அனுமதிப்பதை புரிந்துகொள்கிறோம்.
திருமணம் செய்வதற்காக பெண் பேசிய பின் ஏற்ப்படும் விருப்பத்தைத் தான் இது குறிக்கும் என்று கூற முடியாது. ஏனென்றால் திருமணத்திற்க்காக பெண் பேசுவதற்கு முன்னரே ஒரு பெண் மீது விருப்பம் கொள்வதை அங்கீகரிக்கும் விதத்தில் இன்னொரு வசனம் உள்ளது.

“(இத்தா இருக்கும் பெண்ணை) பெண் பேசுவதை நீங்கள் சாடையாக எடுத்துக் கூறுவதிலோ அல்லது உங்கள் மனங்களில் மறைத்து வைப்பதிலோ குற்றமில்லை. நிச்சயமாக நீங்கள் அவர்களை நினைப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். எனினும் நல்ல வார்த்தையை கூறுவதைத் தவிர (திருமணம் செய்வதாக) ரகசியமாக வாக்குறுதி கொடுத்துவிடாதீர்கள். மேலும் (இத்தாவின்) தவணை முடிகின்றவரை திருமண ஒப்பந்தத்தை உறுதி செய்யாதீர்கள். “[அல்குர்ஆன் 2:235]

இந்த வசனத்தில் இத்தாவில் இருக்கும் பெண்ணை திருமணம் செய்ய விரும்பும் ஒருவர் இத்தா முடியும் வரை பெண் பேசக் கூடாது என்று அல்லாஹ் தடை செய்கின்றான். ஆனால் நீங்கள் அவர்களை நினைப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான் என்றும் கூறுகிறான். இதன் மூலம் பெண் பேசுவதற்கு முன்பே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் விரும்புவது குற்றமாகாது என்பதைப் புரிகிறோம்…
அப்துர்ரஹ்மான் மன்பஈ

சரி..! இதே போன்று பெண்களும் ஆண்கள் மீது விருப்பம் ஏற்பட்டு பின்பு அவனை திருமணம் செய்வதை முஹம்மதியம் அனுமதிக்கிறதா?

பெண்களின் உரிமைகள் ஓர் இஸ்லாமிய நோக்கு
…இல்லற வாழ்வில் பெண்ணுக்குரிய அனைத்த உரிமைகளையும் இஸ்லாம் நிறைவாக வழங்கியுள்ளது. ஆரம்பமாக தனது வாழ்க்கைத் துணைவனை தெரிவு செய்யும் உரிமையை அது பெண்ணுக்கு வழங்கியுள்ளது…

அதென்ன தெரிவு செய்யும் உரிமை?

பொதுவாக பெண், ஆண் அல்லது திருநங்கை  என  எவராக இருந்தாலும் தனது விருப்பத்திற்கேற்ப இணையரைத் தேர்தெடுக்க, அவர் விரும்பும் பாலின நபரின் உடல் தோற்றம், வசீகரம், உரையாடல்கள், பழகும் விதம், குண நலன்கள், இயல்பு, ஆற்றல் எனப் பல்வேறு ஆளுமைப் பண்புகளால் ஈர்க்கப்பட வேண்டும்; சுருக்கமாகக் கூறினால் காதல் வயப்பட வேண்டும்.



காதல் என்றால் உடலிலுள்ள  Testosterone, Oestrogen, NeuroTransmitter, Adrenalin, Dopamine, Serotonin, Oxytocin, Vasopressin  போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் எனும் உடற்கூறுகளைக் கொண்டு விவாதிக்குமளவிற்கு குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் ஒன்றுமில்லை.  எனவே முஹம்மதியத்தை கட்டிக் காக்கும் முல்லாக்கள், காதலைப்பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.

காதல் என்றால் என்ன.? இஸ்லாம் இதற்கு அனுமதிக்கிறதா.? என்ற கட்டுரையில் ஒரு முல்லா கூறுவதிலிருந்து சில பகுதிகள்.

…காதல் என்பது ஒருஉறவே இல்லை என்றபோது நாம் என்ன கூறுவது!!, என்னை பொறுத்தவரை அது ஒரு இச்சை, காமத்தின் கிளர்ச்சி எனலாம். காதலுக்கு ஜாதி மதம் எல்லாம்கிடையாது என்கின்றனர். முதலில் அதுஒரு உறவே கிடையாது, அது ஒரு இளம் பருவ கிளர்ச்சி …
…திருமணத்திற்கு முன் ஓர் ஆண் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புவது அல்லது ஓர் பெண் ஆணைத் திருமணம் செய்ய விரும்புவதுதான் காதல் என்று சொன்னால் அதனை இஸ்லாம் தாராளமாக அனுமதிக்கின்றது. மாறாக இன்றைய காலகட்டத்தில் காதலின் பெயரால் இடம்பெறுகின்ற வரம்பு மீறிய செயற்பாடுகளைத்தான் தடை செய்கின்றது…
இப்போது உள்ளதுபோல் தனக்கு பிடித்த பெண்னிடம் நேரடியாக சொல்லி மனதை கெடுத்து பெற்றோருக்கு தெரியாமல் பேசுதல் பழகுதல் நிச்சயமாக விபசாரமே!!! அல்லாஹ் நம் அனைவரையும் விபசார பார்வையிலிருந்து காப்பாற்றுவானாக , !!! ஆமீன்
thuuyavali.com



காதல் – ஓர் இஸ்லாமிய பார்வை
…திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்தில் இருவர் கொள்ளும் நேசம் தடை செய்ய இயலாதது. ஆனால் அதில் மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட எதுவும் கலக்கக் கூடாது. திருமணம் நடக்காதவரை அந்நியர்கள் தான், அந்நியர்களிடம் பேண வேண்டிய ஒழுக்கத்தை எல்லா நிலையிலும் பேண வேண்டும்…
அப்துர்ரஹ்மான் மன்பஈ
இந்த முல்லாக்களின் விளக்கங்கள் முஹம்மதியத்துடன் எவ்வாறு பொருந்துகிறது என்பதை பார்க்கலாம்.

ஒரு முஹம்மதியப் பெண் திருமணத்திற்காக தனது துணையை காதல் கொண்டு தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?


இந்தக் கேள்வியை,


“முஹம்மதியப் பெண் சுதந்திரமாக வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?” என்று கேட்பதே சரியாக இருக்கும்.

முஹம்மதியப் பெண்கள், வயது முதிர்ந்த கிழவிகளாக இருந்தாலும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டும்; தவிர்க்க முடியாத சூழலில் வீட்டிலிருந்து தகுந்த துணையுடன் மட்டுமே அதாவது திருமணமாகாத  பெண்ணாக இருப்பின் திருமணம் செய்து கொள்வதற்கு முஹம்மதியத்தால் அனுமதி மறுக்கப்பட்ட தந்தை, சகோதரன் போன்ற உறவுகளுடனும், திருமணமான பெண்ணாக இருப்பின் கணவனுடனும் முஹம்மதியம் போதிக்கும் ஆடைக் கட்டுபாட்டுடன் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும். தங்களது தேவைகளாகவே இருப்பினும் அவர்கள் விருப்பத்திற்கேற்ப தான்தோன்றித்தனமாக வீடுகளைவிட்டு வெளியேறவும் கூடாது, அந்நிய ஆண்கள் அதாவது திருமணம் செய்து கொள்ள முஹம்மதியத்தால் அனுமதிக்கப்பட்ட ஆண்களின் முன், தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவும் கூடாது என்கிறது குர்ஆன்.


குர்ஆன் 33:33
நீங்கள் உங்களது வீட்டுக்குள் இருங்கள். ஆரம்பகால ஜாஹிலிய்யப் பெண்கள் அழகை வெளிக்காட்டி வெளியிலே திரிந்ததைப் போல நீங்கள் வெளியேறிச் செல்லாதீர்கள்…



’ஆரம்பகால பெண்கள் ஜாஹிலியா அழகை வெளிக்காட்டி’ என்றால் என்ன?

“முந்தைய அஞ்ஞானக் காலத்தைப் போன்று ஒப்பனையையும் ஒய்யாரத்தையும் காட்டிக்கொண்டு திரியாதீர்கள்.” என்கிறது IFT-ன் குர்ஆன் தமிழாக்கம். வழக்கம்போல இந்த வசனத்தின் மொழிபெயர்ப்பிலும் தங்களது ‘திறமை’யைக் காண்பித்திருக்கின்றனர். இவ்வசனத்தில் அழகை வெளிக்காட்டி” அல்லது “ஒப்பனையையும் ஒய்யாரத்தையும்” என்று பொருள்படுவிதமாக எந்த ஒரு பதமும் குர்ஆனின் அரபு மூலத்தில் இல்லை.

33:33. உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்!..
அண்ணன் பீஜே தமிழாக்கம்
குறிப்பிட்ட இந்த வசனத்தைப் பொருத்தவரையில் அண்ணன் பீஜே அவர்களின் குர்ஆன் தமிழாக்கம் சரியாக இருக்கிறது. (யாருகிட்ட…. என்ன நினைச்சீங்க அண்ணனப்பத்தி…!)


ஜாஹிலியா காலத்துப் பெண்கள் எவ்வாறு இருந்தனர்?

’ஜாஹிலியா’ – ’ஜஹ்ல்’ என்றால் அறியாமை  அல்லது முட்டாள் என்று பொருள் கூறுகின்றனர். தனது பெரிய தந்தை ஒருவரை முஹம்மது ‘அபூஜஹ்ல் –முட்டாள்களின் தந்தை’ என்று அழைத்துக் கொண்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள். இவர்கள் குறிப்பிடும் இந்த ’ஜாஹிலியா காலம்’ மிகச் சரியாக எங்கு முடிவடைந்தது என்பது அல்லாஹ் உட்பட எவருக்குமே கூடத் தெரியாது. நாம் முஹம்மதிற்குப் பிறகு அதாவது அவர் அல்லாஹ்வின் தூதராக பதவியேற்ற பிறகு CE 610-ல் ’ஜாஹிலியா காலம்’ முடிவிற்கு வரத் துவங்கியதென்று வைத்துக் கொள்வோம்.

CE 610-ற்கு முன்புவரை அன்றைய பாகன் அரேபியர்கள் காட்டுமிராண்டிகளைப் போல முட்டாள்த்தனமாக வாழ்ந்து கொண்டிருந்ததாகக் கூறுகின்றனர். பாகன் அரேபியர்கள் கல்வி, பண்பாடு, நாகரீகம் என்று எந்த விதமான அறிவுமில்லாமல் இருந்ததாகவும் அவர்களைத் தூதர் முஹம்மது தனது சீரிய போதனைகளால் மனிதர்களாக, புனிதர்களாக மாற்றினார் என்று முல்லாகள் கண்ணீர் மல்க இன்றும் பரப்புரை செய்து கொண்டிருக்கின்றனர்.

நான் நம்பிக்கைகளில் இருந்த காலத்தில் முல்லாகளின் பயான்களைக் கேட்டுக் கேட்டு ’ஜாஹிலியா’ காலத்து அரேபியர்களும் அவர்களது கலாச்சாரமும் சற்றேறக்குறைய ஆங்கிலத் திரைப்படங்களில் சித்தரிக்கப்படும் “cannibals”க்கு இணையாக இருக்குமென்று நினைத்திருந்தேன். இத்தகையதொரு கூட்டத்தை மீட்டெப்பது அத்தனை எளிதான இலக்கல்ல; இதை வெற்றிகரமாகச் செய்த தூதர் முஹம்மது மிகப் பெரிய சாதனையாளர்தான் என்றும் எண்ணிக் கொள்வேன்.

இஸ்லாத்தில் பெண்கள் நிலை
…இஸ்லாத்திற்கு முன்பு வரை அரேபியர்களிடத்தில் பெண்கள் இழிந்த பிறவிகளாக இருந்தனர். அவளுக்கு சொத்துரிமை கிடையாது. அவர்களை ஒரு பொருட்டாகக் கருதப்பட மாட்டாது. அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. மட்டுமல்லாமல் அவர்களில் பெரும்பாலோர் தம் பெண்மக்களை உயிருடன் புதைப்பவர்களாக இருந்திருக்கின்றனர்.
இவ்வனைத்து அநியாயங்களைப் பெண்களை விட்டும் நீக்கவும் நிச்சயமாக ஆண்களும் பெண்களும் சமமானவர்கள்தான் என விளக்கவும்தான் இஸ்லாம் வந்தது. எனவே ஆண்களுக்கு உரிமைகளிருப்பது போல் பெண்களுக்கும் உரிமைகளிருக்கின்றன…
Readislam.net

பாகன் அரேபியர்களைப்போன்று முஹம்மது, பெண்களைக் போகப் பொருளாக கருதவில்லை; பெண்களின் உரிமைக்காக பாடுபட்ட உத்தமர் எனில்ல், பலதாரமணத்திலும், எண்ணாற்ற அடிமை பெண்களுடன் பாலுறவில் ஈடுப்பட்டதும் ஏன் என்ற கேள்வி என்னுள் எழும்.

அவரது பலதார மணத்திற்கு நியாயம் கற்பிக்கும் பொழுது, அன்றைய அரேபியர்கள் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர், குறிப்பாக மாமனார்- மருமகன் உறவுவிற்கு பெரிதும் மதிப்பளித்தனர் என்பார்கள் முல்லாக்கள். அபூபக்கர், மற்றும் உமர் ஆகியோரது மகள்களைத் திருமணம் செய்ததும் இந்நோக்கத்தில்தான். மேலும் இனக்குழுக்களுக்கும் முஹம்மத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் இடையே உருவாகியிருந்த பகைமைகளை அகற்றவும், அவர்களுக்கிடையே ஏகத்துவத்தையும், குர்ஆனின் செய்திகளை கொண்டு சேர்ப்பதற்காகவும் அவர்களது பெண்களை திருமணம் செய்தார்; எனவே அவரது பலதாரமணத்தில் காமம் முதன்மைப்படவில்லை என்பார்கள்.

பெண்களை இழிபிறவிகளாக அன்றைய பாகன் அரேபியர்கள் கருதியிருந்தால், தங்களது மருமகன்களையும் அவர்கள் ஒரு பொருட்டாகவே நினைத்திருக்க மாட்டார்கள். மாறாக மருமகன் என்ற உறவிற்குப் பெரிதும் மதித்தனர் எனில், அவர்கள் தங்களது பெண் குழந்தைகளின் மீது அளவற்ற அன்பைக் கொண்டிருந்திருக்கின்றனர் என்று சொல்லலாம். பொதுவாக முல்லாக்களின் விளக்கங்கள் ஒன்றிற்கொன்று முரணானாகத்தான் இருக்கும்.

அடுத்து முஹம்மதியப் பரப்புரையாளர்கள் முன்வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு,

அரேபியர்கள் பெண்குழந்தைகளை இழிவாகக் கருதி உயிருடன் புதைத்து வந்தனர். கண்மணி நாயகம் முஹம்மது களம் கண்டு அக்கொடிய வழக்கத்தை வேறுடன் பிடுங்கி எறிந்தாரென்று கொக்கரிப்பார்கள்.  இதைப்பற்றி முன்பே விவாதித்திருக்கிறேம் அதன் இணைப்பு.

உண்மை என்னவெனில், பாகன் அரேபியர்களை வெற்றி கொண்ட முஹம்மதின் அடியார்கள், சுமார் முன்னூறு ஆண்டுகள் வரலாற்றை திரித்தும், புரட்டியும் எழுதி தங்களது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டனர்.  பாகன் அரேபியர்களை கொடூரமானவர்களாகவும், முட்டாள்களாகவும், நாகரீகமற்ற காட்டுமிராண்டிகளாகவும், பெண்களை போகப் பொருளாக கருதினர், இழிவாக நடத்தினர், பெண்களுக்கு சொத்தில் எந்த உரிமையையும் வழங்கவில்லை, பெண்குழந்தைகளை உயிருடன் புதைத்தனர் என்றெல்லாம் சித்தரித்து தூதர் முஹம்மதின் போதனைகளை உன்னதமானவைகள் என்று நிருவ முயற்சிக்கின்றனர். குர்ஆன், ஹதீஸ் மற்றும் முஹம்மதின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும் எவராலும் ’ஜாஹிலியா காலம்’ என்று முஹம்மதியர்களால் எள்ளிநகையாடி வர்ணனை செய்யப்படும் செய்திகளிலுள்ள முரண்பாடுகளை அப்பட்டமாகப் புரிந்து கொள்ள முடியும். முஹம்மதையும் அவரது கடவுள் அல்லாஹ்வையும் உயர்த்திப் பிடிக்க வேண்டுமென்பதற்காக பாகன் அரேபியர்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் குர்பானி கொடுத்துவிட்டனர்.

அன்றைய மக்களின் இலக்கியம், கவிதைகள், வழிபட்ட கடவுள்கள், ஆலயங்கள், என்று அவர்களது வாழ்க்கை முறைகள் பற்றி செய்திகள் அனைத்தையும் எதையும் மிச்சமின்றி அழித்ததுடன், இல்லாத கட்டுக்கதைகளை பாகன் அரேபியர்களைப்பற்றிய செய்திகளாக குர்ஆன் ஹதீஸ்களில் எழுதிவைத்துக் கொண்டிருக்கின்றனர். பாகன் அரேபியர்களின் அன்றைய வாழ்க்கைமுறையை தேடிச் சென்றால் முஹ்ம்மதியர்கள் எழுதிக் குவித்து வைத்திருக்கும் கட்டுக்கதைகளை குப்பைகளையே நீங்கள் அடைவீர்கள். நூற்றாண்டுகளாகத் திட்டமிட்டு இச்செயலை அரங்கேற்றியிருக்கின்றனர். முஹம்மதிவின் அதிஉன்னத போதனைகளால் மனிதப் புனிதர்களாக உருப்பெற்ற  முஹம்மதியர்களின் நாகரீகத் தன்மைக்கு உதாரணமாக தலீபான்களால் அழிக்கப்பட்ட பாமினியன் புத்தர் சிலைகளைச் சொல்லலாம். இது போன்ற அறம் மிகுந்த செயல்கள் அவர்களின் வரலாறுகள் நெடுகிலும் காணமுடியும்.

இவர்கள் என்னதான் அழித்தொழிப்புப் பணிகளைச் செய்தாலும், புனித புத்தகங்களாக எழுதிக் கொண்டாலும், உண்மையை முழுவதுமாக மறைக்க முடியவில்லை. குப்பைகளாக குவிந்து கிடக்கும் முஹம்மதியர்களின் புனித புத்தங்களின் வாக்கியங்களிடையே, அன்றைய பாகன் அரேபியர்கள் பற்றி மறைக்கப்பட்ட உண்மைகளின் சுவடுகள் இன்றும் மின்னிக் கொண்டிருக்கிறது.

உண்மையில் ’ஜாஹிலியா’ காலத்து பாகன் அரேபியர்கள் குடும்ப உறவுகளையும், தங்களது இனக் குழுவையும் உறவுமுறைகளையும் மிகவும் போற்றி மதித்தனர். பிற இனக்குழுவினருடனுன் நட்பு பாராட்டி வந்தனர். கொடுத்த வாக்குறுதிகளை உயிருக்கும் மேலாக கருதி நிறைவேற்றினர். தங்களது முதன்மை ஆலயமான கஅபாவில் 360-ற்கும் மேற்பட்ட வெவ்வேறு இனக்குழுக்களின் கடவுளர்களின் சிலைகளை வைத்து ஒற்றுமையாக வழிபாடு செய்து வந்தனர். கடவுளின் பெயரால் அவர்கள் தங்களுக்குள் ஒருபொழுதும் சண்டையிட்டுக் கொண்டதில்லை. சிலை வழிபாடுகளையும், பல தெய்வக் கொள்கைகளை  மறுக்கக்கூடிய  யூத, கிருத்துவ மக்களுடன் நன்முறையில் நட்பு பாராட்டி வந்தனர். இவர்கள் தங்களுக்கிடைய கடவுளின் பெயரால் ஒருநாளும் மோதிக் கொண்டதில்லை; முஹம்மது வாளெடுக்கும் வரை அங்கு மதத்தின் பெயரால் இரத்தம் சிந்தப்படவில்லை. இதுமட்டுமல்லாது அவர்களிடைய சுதந்திரச் சிந்தனையாளர்களும் இருந்தனர். பாகன் அரேபியர்களில் சுதந்திர சிந்தனையாளர்கள் இருந்தனரா? என்று ஆச்சரியப்பட வேண்டாம்.

குர்ஆன் 6:25
…"இது முன்னோர்களின் கட்டுக்கதைகள் தவிர வேறில்லை'' எனக் கூறி உம்மிடம் தர்க்கம் செய்வார்கள்.
முஹம்மது கூறிய வரலாற்று(!) செய்திகளை “முன்னோர்களின் கட்டுக்கதைகள்” என்று கூறித் தர்க்கம் செய்வதற்கு யாரால் முடியும்?

அவர் கூறியவைகளில் மிகப் பெரும்பாலானவை யூத, கிருஸ்தவ புராணங்களிலிருந்து திருடப்பட்டவைகளே! எனவே அவர்களால் முஹம்மது கூறியவைகளை ”முன்னோர்களின் கட்டுக்கதைகள்” என்று மறுத்து ஒதுக்க முடியாது. பல தெய்வ வழிபாட்டிலிருந்த பாகன் அரேபியர்கள் யூத, கிருஸ்தவத்து புராணக்கதைகளுடன் தங்களது லாத், மனாத், உஸ்ஸா போன்ற கடவுளர்களையும் இணைத்து வழிபடு செய்து கொண்டிருந்தவர்கள்; அவர்களாலும் ”முன்னோர்களின் கட்டுக்கதைகள்”என்று கூறி மறுக்க முடியாது. முஹம்மதின் போதனைகளை “முன்னோர்களின் கட்டுக்கதைகள்” மறுத்தவர்கள் பாகன் அரேபியர்களிடையே இருந்த நம்மைப் போன்ற சுதந்திரச் சிந்தனையாளர்கள்தான். ”முன்னோர்களின் கட்டுக்கதைகள்” என்று பொருள்படும் சொற்கள் குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கணிசமான அளவிற்கு அன்று சுதந்திரச் சிந்தனையாளர்களும் இருந்திருக்கின்றனர் என்பதே இதன் பொருள்.

இவ்வாறு சகிப்புத் தன்மையுடன், நாகரீகமாக இருந்தவர்களைத்தான் நம்முடைய கண்மணி முஹம்மது தன்னுடைய ’அற்புத’ போதனைகளால் தந்தைக்கு எதிராக மகனையும், அண்ணனுக்கு எதிராக தம்பியையும் ஆயுதங்களை ஏந்தி நிற்க வைத்தார். திடீர்த் தாக்குதல்கள் மூலம் பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாகக் கைப்பற்றி கற்பழித்தார்; விந்தை எங்கு செலுத்த வேண்டுமென்று தன்னுடைய குண்டர் படைக்கு பள்ளிப்பாடம் நடத்தினார்; கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுவது எவ்வாறென்று கற்பித்துக் கொடுத்தார். தான் மட்டுமல்லாது தன்னுடைய தொண்டரடிப் பொடிகளுக்கும் பிற நம்பிக்கையாளர்களின் கடவுள்களை தரக்குறைவாக வசைபாடுவதற்கும் கற்பித்துக் கொடுத்தார்.

உதாரணத்திற்கு, முஹம்மதியர்கள் தங்களது இரண்டாம் கலீபா அபூபக்கரைப்பற்றிக் கூறும் பொழுது அமைதியானவர், மிக கண்ணியமானவர் என்றெல்லாம் புல்லரித்துக் கொள்வார்கள். அத்தகைய அபூபக்ரின் கண்ணியமிக்க ஒரு உரையாடலை கவனிப்போம்.  (இது சற்று பெரிய ஹதீஸ். எனவே தேவையான பகுதியை மட்டும் இங்கு கொடுத்திருக்கிறேன். முழு ஹதீஸையும் வாசிக்க விரும்புபவர்கள் புகாரி தொகுப்பிற்கு செல்லலாம்.)

புகாரி 2731 & 2732
மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), மர்வான் இப்னி ஹகம் ஆகிய இருவரும் - ஒருவர் சொன்னதை மற்றவர் உண்மைப்படுத்தியவாறு - கூறினார்.
ஹுதைபிய்யா உடன்படிக்கை நடைபெற்ற காலகட்டத்தில் (மக்காவை நோக்கி) நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள்…
..அவரும் நபி(ஸல்) அவர்களிடம் சென்று பேசத் தொடங்கினார். நபி(ஸல்) அவர்கள் புதைலிடம் சொன்னதைப் போன்றே சொன்னார்கள். அப்போது உர்வா, 'முஹம்மதே! உங்கள் சமுதாயத்தினரை முற்றிலுமாக அழித்து விடுவதை நீங்கள் பொறுத்தமாகக் கருதுகிறீர்களா? உங்களுக்கு முன்னால் அரபுகள் எவரேனும் தம் சமுதாயத்தாரை வேரோடு அழித்தார் என்று நீங்கள் கேள்விப்பட்ட துண்டா? வேறுவிதமான முடிவு ஏற்பட்டாலும்... குறைஷிகள் வென்றாலும்...(அதனால் உங்கள் தோழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விடுவார்கள் அல்லவா?) நானோ, அல்லாஹ்வின் மீதாணையாக! பலமுகங்களை (உங்கள் தோழர்களிடம்) பார்க்கிறேன்; மக்களில் பலதரப்பட்டவர்களைப் பார்க்கிறேன்; உங்களைவிட்டுவிட்டு விரண்டோடக் கூடிய (கோழைத்தனமுடையவ)வர்களாகவே (இவர்களை) நான் பார்க்கிறேன்" என்று கூறினார். (இதைக் கேட்ட) அபூ பக்ர்(ரலி) அவரை அக்கால வழக்கப்படி ஏசிவிட்டு, 'நாங்கள் இறைத்தூதரைவிட்டுவிட்டு ஓடி விடுவோமா?' என்று (கோபத்துடன்) கேட்டார்கள். அதற்கு உர்வா, 'இவர் யார்?' என்று கேட்டார். மக்கள் 'அபூ பக்ர்" என்று பதிலளித்தார்கள்…

ஆங்கிலத்தில்,
..Hearing that, Abu Bakr abused him and said, "Do you say we would run and leave the Prophet  alone?" `Urwa said, "Who is that man?"…

தடித்த எழுத்துக்களில் குறிப்பிட்டு காண்பிக்கப்பட்டுள்ள ”அவரை அக்கால வழக்கப்படி ஏசிவிட்டு” என்ற வாசகம் குறிப்பிட்ட ஹதீஸ் கிடையாது. ஹதீஸின் அரபு மூலத்தில் “فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ امْصُصْ بَظْرَ اللاَّتِ،” என்று  இருக்கிறது. தமிழானாலும் ஆங்கிலமானாலும் இவ்வாக்கியத்தை மொழியாக்கம் செய்வதற்கு முல்லாக்களுக்கு கூச்சமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.  குறிப்பிட்ட அந்த வாக்கியத்தை மீண்டும் கவனிப்போம்.

…பலமுகங்களை (உங்கள் தோழர்களிடம்) பார்க்கிறேன்; மக்களில் பலதரப்பட்டவர்களைப் பார்க்கிறேன்; உங்களைவிட்டுவிட்டு விரண்டோடக் கூடிய (கோழைத்தனமுடையவ)வர்களாகவே (இவர்களை) நான் பார்க்கிறேன்" என்று கூறினார். (இதைக் கேட்ட) அபூ பக்ர்(ரலி) அவரிடம், “அல்-லாத்தின் யோனியை நக்கு! நாங்கள் இறைத்தூதரைவிட்டுவிட்டு ஓடி விடுவோமா?” என்று (கோபத்துடன்) கேட்டார்கள்…

இங்கு உர்வா முஹம்மதையோ அல்லது அவரது கடவுள் அல்லாஹ்வைப்பற்றியே தரக்குறைவாக எதுவுமே சொல்லவில்லை. முஹம்மதைச் சுற்றியிருக்கும் கைத்தடிகளின் மீது பொதுவான ஒரு விமர்சனத்தை நாகரீகமாகவே முன்வைக்கிறார். ஆனால் அபூபக்ரின் மறுமொழியோ மிகக் கேவலமாக இருக்கிறது. முஹம்மதின் தயாரிப்பு எவ்வாறு இருந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். இதைப் போல நிறைய சொல்ல முடியும்.  நாம் இவைகளைப்பற்றி ஆதாரப்பூர்வமாக விவாதிக்கத் துவங்கினால் தலைப்பிலிருந்து வெகுதூரத்திற்கு விலகிவிடுவோம்.

ஜாஹிலியா காலத்துப் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது?
ஜாஹிலியா காலத்தில் வாழ்ந்ததாக முஹம்மதியர்கள் குறிப்பிடும் சில பெண்களைப்பற்றிப் பார்ப்போம்

கதீஜா பின்த் குவைலித்:
இவர் அன்றைய மெக்க நகரில் மிகப் பெரும் செல்வச் சீமாட்டி; மிகப்பெரும் வியாபாரத்தை தன்னந்தனியாக நிர்வகித்துக் கொண்டிருந்தார். தன்னுடைய மூன்றாவது கணவராக தன்னைவிட வயதில் மிக இளையவராகவும், ஆடுமேய்ப்பவராகவும் இருந்த முஹம்மதை தன்னுடைய விருப்பத்தின் பெயரில் மூன்றாவது கணவராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். அன்றைய பாகன் அரேபியர்கள் பெண்களுக்கு சொத்தில் எவ்வித உரிமைகளையும்  வழங்காதிருந்தால், கதீஜாவிற்கு இத்தனை உடைமைகள் எங்கிருந்து வந்தது? பெரும் சொத்தை நிர்வகித்து, முஹம்மது போன்ற ஆடோட்டிகளை தன்னுடை வியாபாரப் பணியாளாக நியமித்துக் கொள்ளும் அதிகாரத்தை வழங்கியது யார்?

அஸ்மா பின்த் மர்வான்:
இவர் உமையா குலத்தை சேர்ந்தவர். அவருடைய குலத்தினரால் மதித்துப் போற்றப்படும் பெண்மணியாக இருந்தார். அவர்களை தலையேற்று வழிநடத்திக் கொண்டிருந்தார்.

முஹம்மதிற்கு எதிராக தனது கருத்துக்களை வெளிப்படையாகவே கூறினார். முஹம்மதை கேலி செய்து கவிதைகளைப் புனைந்தார். அபு அஃபக் என்ற முதியவர் முஹம்மதின் அடியாட்கள் நயவஞ்சகமாக கொலை செய்ததை எதிர்த்து தனது உணர்வுகளைக் கவிதைகள் மூலம் வெளிப்படுத்தினார். வழக்கப் போல முஹம்மதின் அடியாட்கள் இவரையும் கொன்றுவிட்டனர்.

முஹம்மது போன்ற வெறிபிடித்த ஆட்சியாளர்களுக்கு எதிராக தனது கருத்தை தெரிவிக்குமளவிற்கு அன்றைய பாகன் அரேபியப் பெண்களுக்கு சுதந்திரம் இருந்தது. கவிதைகளை இயற்றுமளவிற்கு கல்வியறிவும் பெற்றிருந்தனர்.

உம்மு கிர்ஃபா :
இவர் பனூ ஃபஸாரா குலத்தினரின் தலைவியாக இருந்தார். உம்மு கிர்ஃபாவின் இயற்பெயர் ஃபாத்திமா பின்த் ராபியா பின்த் பத்ர் அவர், மாலிக் பின் ஹுதைஃபா பின்த் பத்ர் என்பவரின் மனைவியாக இருந்தார். தனது சமுதாயத்தை ஒரு தாயைப்போல அரவணைத்து பாதுகாத்துவந்தார். அதனால் அவருக்கு அந்த சமுதாய மக்களிடையே மட்டுமல்லாமல் மற்றவர்களிடம்கூட செல்வாக்கு இருந்தது. முஹம்மதுவினால் படுகொலை செய்யப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இந்த இணைப்பில் உம்மு கிர்ஃபாவைப் பற்றி முன்பே நாம் கவனித்திருக்கிறோம்

ஹிந்த் பின்த் உத்பா:
இவர் குறைஷிகளின் தலைவர் அபூசுஃப்யானின் மனைவி. பத்ரு மற்றும் உஹது தாக்குதல்களில் முஹம்மதியப் படைகளுக்கு எதிரான இவர் கொடுத்த பங்களிப்பை முஹம்மதியர்களால் என்றும் மறக்கவோ மறைக்கவோ முடியாது. போர்க்களத்தில் பணியாற்றிய குறைஷிகளின் பெண்களுக்கு தலைமையேற்று வழி நடத்தினார். வகித்தார்; படையினருக்கு உற்சாகமூட்டி கவிதைகளைப் பாடினார். பிற்காலத்தில் வேறுவழியின்றி இவரும், இவரது குடும்பத்தினரும் முஹம்மதியத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் பிற்காலத்தில் இவர்களது கை ஓங்கிய பொழுது முஹம்மதின் குடும்பம் மிக ”நன்றாக” கவனிக்கப்பட்டது.

உம்மு ஜாமில் பின்த் அர்வா:
இவர் புகழ் பெற்ற அபூ லஹப்பின் மனைவி; அபூ ஸுஃப்யானின் சகோதரி; குறைஷி குலப் பெண்களில் புகழ் பெற்று விளங்கியவர். முஹம்மதிற்கு தந்தைவழி சிறிய தாயார் ஆவார். முஹம்மதின் போதனைகளை கவிதகளால் எள்ளி நகையாடினார். எரிச்சலடைந்த முஹம்மது குர்ஆனின் 111–ம் அத்தியாயத்தில்,

அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான்.
அவனது செல்வமும், அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை.
கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும் விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள்.
அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது.

என்று இகழ்ந்துரைத்து விட்டார். இந்த வசை மொழிகளைத்தான் முஹம்மதியர்கள் புல்லரிக்க தொழுகைகளில் ஓதிக் கொண்டிருக்கின்றனர். நாம் கவனித்த இப்பெண்கள் அன்றைய அரேபியச் சமுதாயத்தில் மதிப்பு மிக்க தலைவர்களாக, தங்களது கருத்துக்களை துணிந்து நயமான கவிதை வடிவில் சொல்லக் கூடிய அளவிற்கு கல்வியறிவு கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். அன்றைய அரேபியர்கள் பெண்களை இழிவாகக் கருதிவில்லை என்பதையே இவைகள் நமக்கு உணர்த்துகின்றன.

முஹம்மதின் தரம்தாழ்ந்த சந்தேக புத்தி பெண்களை வீட்டிற்கு முடக்கி வைக்க அறிவுறுத்தியிருக்கிறது. அவர்கள் தங்களது தேவைகளுக்காக வெளியில் செல்வதால் அப்படியென்ன பிரச்சினை என்கிறீர்களா? இவ்வாறு அழகை வெளிக்காட்டித் திரிந்த பெண்களால் நம்முடைய கண்மணி நாயகம் முஹம்மது அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைய பாருங்கள்.

முஸ்லீம் 2718
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் தம் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் தமக்குரிய ஒரு தோலைப் பதனிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிவிட்டுப் பிறகு தம் தோழர்களிடம் புறப்பட்டு வந்து, "ஒரு பெண் ஷைத்தான் கோலத்திலேயே முன்னோக்கி வருகிறாள்; ஷைத்தான் கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள். எனவே, உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து விட்டால், உடனே அவர் தம் துணைவியிடம் செல்லட்டும். ஏனெனில், அது, அவரது மனத்தில் தோன்றும்  எண்ணத்தை அகற்றிவிடும்'' என்று கூறினார்கள்.

அன்று ஷைத்தானின் தூண்டுதலுக்கு ஆளான முஹம்மதுவிற்கு சற்று அருகாமையில் அவரது முன்னாள் மருமகளும் இன்னாள் மனைவியுமாக இருந்த ஜைனப், தமக்குரிய ஒரு தோலை பதனிட்டுக் கொண்டிருந்திருக்கிறார்; முஹம்மதுவும் ஜைனப்பின் தோலை பதனிட்டார்; முஹம்மதுவின் மனதில் ஏற்பட்ட கெட்ட எண்ணங்களும் அகன்றது. இந்த வாய்ப்பு எல்லோருக்கும் அமையுமா என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்த நிகழ்வின் பொழுது முஹம்மது பதின்ம வயதில் இருக்கும் கட்டிளம் காளை… மன்னிக்கவும், கட்டிளம் ஒட்டகம் அல்ல. அனைத்தும் ஒய்ந்து ஒடுங்கிப் போக வேண்டிய ஐம்பத்து எட்டாம் வயதில் இருந்தார். ஒரு பெண்ணைக் கண்டு, ஏற்கெனவே ஐந்து மனைவிகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு கிழவரின் காம உணர்வுகள் கிளர்ந்தெழுகிறதென்றால் அவரது இச்சையடக்கம் எத்தகையது என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். அதுமட்டுமல்ல அவர் அல்லாஹ்வின் அருள் பெற்றவர்; உலகத்திற்கே தலைசிறந்த முன்மாதிரி; அல்லாஹ்வின் ஒளியாக இருந்த முஹம்மதிற்கே இந்நிலைமையெனில் நவீன கால அற்ப முஃமின்களின் நிலையை சற்று சிந்தித்துப்பாருங்கள்.

ஊடகத்தில் எங்கேனும் ஒரு பாலியல் வன்முறைச் செய்திகள் வந்துவிட்டால் நம்முடைய புர்க்கா போராளிகளுக்கு ஒரே கொண்டாட்டமாகி விடும். பெண்களின் ஆடையை விமர்சிக்க கிளம்பிவிடுவார்கள். அன்றைய ‘ஜாஹிலியா’ கால அரேபியர்களிடம் அவர்களது ஆலயமான கஅபாவை ஆடைகள் ஏதுமின்றி வலம் வழமை இருந்ததாம்(புகாரி 1665). பாலியல் வன்முறைகளுக்கு ஆடைதான் காரணமென்றால் அன்றைய ஜாஹிலியா அரேபியர்கள் ஏன் பாலியல் வன்முறைகளில் ஈடுபடபட்டதாக எந்த ஒரு செய்தியும் இல்லையே.. ஏன்?

இங்கு ஜாஹிலியா காலத்து மனிதர் யார்?

ஜைனப்பைத் தேடி ஓடிய முஹம்மதா? அல்லது ஆடையின்றி வலம் வந்தபோதும் இச்சையடக்கத்துடன் இருந்த பாகன் அரேபியர்களா?
இதைப் போன்ற முஹம்மதின் ஏடாகூடமான அனுபங்கள் காரணமாகவே சிறுமியோ, கிழவியோ, திருமணம் ஆனவரோ இல்லையோ, அவர் பெண்களாக இருந்தால், அந்நிய ஆண்கள் முன்பாக தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டமென்ற தடையை அல்லாஹ்(!) செயல்படுத்தினான்.

முஹம்மதியம், தான் அனுமதித்துள்ள ஆண்களின் துணையின்றி வீட்டைவிட்டு வெளியேறவோ, அல்லது அந்நிய ஆணை சந்திக்கவோ கூடாது என்கிறது.

திர்மிதி 1173
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண்கள் என்போர் மறக்கப்படவேண்டிய (அவரத்) ஆவர், எனவே அவர்கள் (தன்னை அலங்கரித்து) வெளியேறினால். ஷைத்தான் அவளை (ஆண்கள் பார்க்கும் படி) வெளிப்படுத்தி காட்டுவான்.

ஆனால் முல்லாக்கள், “திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்தில் இருவர் கொள்ளும் நேசம் தடை செய்ய இயலாதது என்று” அளந்து விடுகின்றனர். பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறவே கூடாது எனும் பொழுது ”திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் தனக்கு பிடித்தமான ஆணிடம் காதல் கொள்வது எவ்வாறு? எப்படி தனது வாழ்க்கைத் துணைவனை தெரிவு செய்ய முடியும்? எதன் அடிப்படையில் தெரிவு செய்வாள்? என்பதை முல்லாக்கள் விளக்குவது நலம்.

வாழ்க்கைத் துணைவனை தெரிவு செய்யும் உரிமையை இஸ்லாம்  பெண்ணுக்கு வழங்கியுள்ளது என்று கூறும் முல்லாக்களின் வாதத்தில் எந்தப் பொருளுமில்லை. மணமகனை மட்டுமல்ல, இன்று முஹம்மதியப் பெண்களின் அடையாளமாகிப் போன கருப்பு கூடாரத்தைக் கூட அவர்களைது விருப்பதிற்கு அணிய முடியாது.

சிறு குழந்தைகளைத்தான் இப்படி அறியாப் பருவத்திலே கெடுத்து வைக்கிறார்கள் என்றால், எல்லாம் தெரிந்து அறிந்த குடும்பத் தலைவிகள் கூட ஆடை விஷயத்தில் மிகப்பொடுபோக்காகவே இருக்கிறார்கள்.
…புர்கா அணியும் பெண்கள் கூட தனது தலை முடியைப் பின் பக்கம் வெளியே தெரியும் படித்தான் தொங்க விட்டுக் கொள்கிறார்கள். இது எப்படி முழுமையான ஒழுக்கமாக இருக்க முடியும்?

புர்காவிலே கூட பலவிதமான கவர்ச்சியான வேலைப்பாடுகள் உள்ள “ஒர்க் டிஸைன்” புர்கா தான் நிறைய வலம் வருகிறது? இது தன்னை மறைக்கும் ஒழுக்கமான ஆடையா? அல்லது தன்னை விளம்பரப்படுத்தும் விபரீதமான ஆடையா? ஒன்றுமே புரியவில்லை.
ஆடை ஒரு விமர்சனம் :-
அந்நிய ஆண்களைத் தன் பக்கம் கவரக் கூடிய ஆடைகள்… அது மிடி, சுடிதார் செட்டாக இருந்தாலும் சரி… சேலையாக இருந்தாலும் சரி… புர்காவாக இருந்தாலும் சரி… அது நரகின் பக்கம் இழுத்துச் செல்லும் ஆடை தான் !

 வேலைப்பாடுகள் செய்த புர்காவைப்பற்றிய தேவ்பந்த் மதரசா வழங்கியிருக்கும்  ஃபத்வா.

பெண்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப ஆடைகளையே தேர்வு செய்யக் கூட இங்கு வழியில்லை. காதலாவது கத்திரிக்காயாவது…? பெண்கள் அவர்களாகவே இணையைத் தேர்வு செய்வதைப்பற்றி முஹம்மதின் விமர்சனத்தை கவனியுங்கள்.

Sunan Ibn Majah
Vol. 3, Book 9, Hadith 1882
Messenger of Allah said: “No woman should arrange the marriage of another woman, and no woman should arrange her own marriage. The adulteress is the one who arranges her own marriage.”
ஒரு விபச்சாரி மட்டுமே தனது திருமணத்தை தானாகவே முடிவு செய்வாள் என்கிறார் முஹம்மது. அப்படியானால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு வாரிவழங்கிவிட்டதென்று முஹம்மதியர்கள் நீட்டி முழங்கிக் கொண்டிருப்பது என்ன?

புகாரி 6971
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
'(திருமண விஷயத்தில்) கன்னிப் பெண்ணிடம் அனுமதி கோரவேண்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், 'கன்னிப் பெண் (வெளிப்படையாகத் தன் சம்மதத்தைத் தெரிவிக்க) வெட்கப்படுவாளே?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அவளுடைய மெளனமே அவளுடைய அனுமதி' என்றார்கள்.


மணநாளன்று திருமண ஒப்பந்தம் எழுதப்படும் வேளையில் மணப்பெண்ணிடம் சம்மதம் பெற்று அதைப் பதிவு செய்வதை ஒரு  சடங்காக முஹம்மதியர்கள் இன்றும் தொடர்கின்றனர். கடந்த காலங்களில் இது வாய்மொழியாக அறிவிக்கப்பட்டு வந்தது. மணப்பெண் அவளிடம் சம்மதம் கேட்கும் பொழுது பெற்றோர் அல்லது காப்பாளர்கள் இறுதி செய்யும் திருமணம் என்ற ’வியாபார’ ஒப்பந்தத்திற்கு மறுப்பைத் தெரிவிக்கலாம். இந்த வாய்ப்பைதான் இவர்கள் பெண்களுக்கான வாழ்க்கைத் துணைவனை தெரிவு செய்யும் உரிமையென புல்லரித்துக் கொண்டிருக்கின்றனர்.

 உங்களுடைய அனுபவத்தில் அவ்வாறு மறுப்பு தெரிவித்த முஹம்மதியப் பெண்களை கண்டிருக்கிறீர்களா?




நமது சமூகத்தில் அன்றாடம் அரங்கேறும் கட்டாயத் திருமணங்களைப்பற்றி அறிவீர்கள். முஹம்மதியர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல! நடைமுறை வாழ்விலிருந்து இதற்கு எண்ணற்ற உதாரணங்களைக் காண்பிக்க முடியும். மணமேடை ஏறுவதற்கு முன்னதாகவே பெற்றோர்கள் மணப்பெண்ணை தேவையான அளவிற்குத் கட்டாயப்படுத்தித் தயார் செய்திருப்பதனால் மணவேளையின் பொழுது குழப்பங்கள் ஏற்படுவதில்லை. ஆனால் இத்தகைய திருமணங்கள் மிக விரைவில் முடிவிற்கு வந்து விடுகிறது.




இன்றைய முல்லாக்களின் வாதப்படி முஹம்மதியத்தில் கட்டாயத் திருமண இல்லையென்றே வைத்துக் கொள்வோம். ஒரு பெண் தனக்கு விருப்பமான துணையை தேர்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்புகளோ அல்லது அனுமதியோ இருக்கிறதா?

புகாரி 5138
கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா(ரலி) கூறினார்
கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்துவைத்தார்கள். எனக்கு இதில் விருப்பமிருக்கவில்லை. எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் போ(ய் என் விருப்பத்தைச் சொன்)னேன். அத்திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.

மேற்கண்ட ஹதீஸ் மிக முக்கிய ஆதாரமாக முல்லாக்கள் வைக்கின்றனர். அதாவது பெண்ணிற்கு விருப்பமில்லாமல் செய்யப்பட்ட திருமணத்தை முஹம்மது ரத்து செய்துவிட்டார் பாருங்கள் என்பார்கள்.

நமது முல்லாக்கள் சொல்வதுபோல திருமண ஒப்பந்தத்திற்கு மணப்பெண்ணின் அனுமதி அவசியமென்றால், இத்திருமணம் நிகழ்ந்தது எவ்வாறு?

தனது வாழ்க்கைத் துணைவனை தெரிவு செய்யும் உரிமையை குர்ஆன் பெண்ணுக்கு வழங்கியுள்ளது” என்று கூவிக் கொண்டு குர்ஆனின் 4:19-ம் வசனத்தைச் சுட்டுவார்கள்.
குர்ஆன் 4:19 என்ன சொல்கிறது?
குர்ஆன் 4:19
இறை நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப்பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக்(tarithū) கொள்வது உங்களுக்குக் கூடாது.
அதென்ன ”அனந்தரமாகக் கொள்வது”? ”تَرِثُوا-tarithū” என்பதை ”அனந்தர வாரிசாகக் கொள்வது” என்று இன்னும் சற்றுத் திருத்தமாக மொழிபெயர்த்திருந்தால் இதன் பொருள் எளிமையாக எல்லோருக்கும் புரிந்திருக்கும். வேறொரு மொழிபெயர்ப்பைக் கவனிப்போம்.

4:19. இறைநம்பிக்கை கொண்டவர்களே! விதவைப் பெண்களுக்கு பலவந்தமான வாரிசுதாரர்களாய் நீங்கள் திகழ்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல! …
IFT தமிழாக்கம்
இவ்வசனத்திற்கான ஹதீஸ் விளக்கம்

புகாரி 4579
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
'(அறியாமைக் காலத்தில்) ஒருவர் இறந்துவிட்டால் அவரின் வாரிசுகளே அவரின் மனைவியின் மீது அதிக உரிமை உடையவர்களாக இருந்துவந்தனர். அவர்களில் சிலர் விரும்பினால் அவளைத் தாமே மணமுடித்துக்கொள்ளவும் செய்தார்கள். விரும்பினால் (வேறெவருக்காவது) அவளை மணமுடித்துக் கொடுத்துவிடுவார்கள். விரும்பினால் மணமுடித்துக் கொடுக்க(hது அப்படியேவிட்டுவிடுவார்கள்; வாழ அனுமதிக்க) மாட்டார்கள். ஆக, அவளுடைய வீட்டாரை விட (இறந்த கணவனின் வாரிசுகளான) அவர்கள் தாம் அவளின் மீது அதிக உரிமையுடையவர்களாக இருந்தார்கள். அப்போதுதான் இது தொடர்பாக 'இறை நம்பிக்கையாளர்களே! (விதவைப்) பெண்களை நீங்கள் பலவந்தமாக அடைவது அனுமதிக்கப்பட்டதன்று. மேலும், அவர்கள் வெளிப்படையான இழிசெயல் எதையும் செய்தாலன்றி, அவர்களுக்கு நீங்கள் வழங்கிய (மஹ்ர் போன்ற)வற்றில் ஒரு பகுதியைப் பறித்துக் கொள்வதற்காக அவர்களை நீங்கள் கட்டாயப்படுத்தாதீர்கள்' எனும் (திருக்குர்ஆன் 04:19 வது) வசனம் அருளப்பட்டது.

கணவனை இழந்த பெண்களை அவர்கள்வசம் இருக்கும் உடைமைகளை அபகரிப்பதற்காக வற்புறுத்தி திருமணம் செய்து கொள்ளும் வழக்கத்தை குர்ஆன் வசனத்தைக் குறிப்பிட்டு மேற்கண்ட ஹதீஸ் மறுக்கிறது. இதை எவ்வாறு தனது இணையரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை எனக் கருத முடியும்? விருப்பம் போல தனது வாழ்க்கைத் துணைவனை தேர்ந்தெடுத்துக் கொள்ள பெண்களுக்கு எவ்விதமான உரிமையையும் குர்ஆன் வழங்கவில்லை. காரணம் பெண்களை அறிவுத் திறம் நிரம்பியவர்களாகவோ, தங்களது தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாக அல்லது மதிக்கத்தக்கவர்களாகவோ முஹம்மதுவும் அவரது அல்லாஹ்வும் ஒருபொழுதும் கருதியதில்லை.





குர்ஆன் 37:153
ஆண் மக்களை விட பெண் மக்களையா அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டான்?

குர்ஆன் 43:18
ஆபரணங்களைக் கொண்டு வளர்க்கப்பட்டதும் வழக்கில் தெளிவாக எடுத்துக் கூற இயலாததுமான ஒன்றையா (அல்லாஹ்விற்கு சந்ததிகளாக்குகின்றனர்)?

குர்ஆன் 53:21-22
உங்களுக்கு ஆண் குழந்தைகளும், அவனுக்குப் பெண் குழந்தைகளுமா?
அவ்வாறாயின் அது அநீதியான பங்கீடாகும்.

பெண்கள் என்பவர்கள், ஆண்களைவிட தகுதியில் தாழ்ந்தவர்கள், தெளிவாகப் பேசக் கூடத் தெரியாதவர்கள் என்பதுதான் மேற்கண்ட வசனங்களில் முஹம்மதின் அல்லாஹ்வின் கருத்து.  அத்தகைய பெண்களை தனது வாரிசுகளாக் கற்பனைசெய்து கூறுவதைக் கூட அல்லாஹ் விரும்பவில்லை. இவர்களுக்கு தங்களது இணையரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை முஹம்மதிடமிருந்தா...? 

முஹம்மதியப் பெண்கள், சுதந்திரமாக தனது விருப்பத்திற்கேற்ப தனது வாழ்க்கைத் துணையை தேர்தெடுக்கும் உரிமையை குர்ஆன் ஒருபொழுதும் வழங்கவில்லை.

உதாரணத்திற்கு நம்முடைய முஹம்மதின் வாழ்க்கையை எடுத்துக் கொள்வோம். ஆறு வயது சிறுமியாக இருந்த ஆயிஷா தன்னுடைய திருமணத்தின் பொழுது சம்மதம் தெரிவித்தாரா? ஆறு வயது குழந்தைக்கு திருமண வாழ்க்கையைப் பற்றியும், ஆண்-பெண் புணர்ச்சியைப் பற்றியும் என்ன தெரியும்? ஆறு வயது சிறுமியிடம் திருமணத்திற்கும், அவளுடன் கலவியில் ஈடுபடவும்  முஹம்மது எவ்வாறு எப்படி சம்மதம் பெற்றார்?
4.1
முஹம்மதியத்தில் கட்டாயத் திருமணங்கள் அரங்கேறுவதில்லையா…?

முஹம்மதின் வாழ்விலிருந்து ஒரு நிகழ்வைக் கவனிப்போம். முஹம்மதுவின் முதலாவது மனைவி கதீஜா அவர்கள் சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட ஹாரிஸா என்பவரின்  மகன் ஸைத் என்பவரை விலை கொடுத்து வாங்கியிருந்தார்கள். கதீஜா முஹம்மதை மணந்தவுடன் சிறுவனாக இருந்த ஸைத்தை கணவர் முஹம்மதுவிற்கு வழங்கினார். சொந்த மகனைப் போலவே ஸைதை,  முஹம்மது தனது  இருபத்தைந்தாம் வயது முதல் ஐம்பத்தி ஐந்தாம் வயது வரை வளர்த்து வந்தார். ஸைத்-ம் முஹம்மதின் அனைத்து காரியங்களுக்கும் பொறுப்பாளராக இருந்தார். வளர்பு மகனை தங்களது சொந்த மகன்களாகவே காண்பதும் அவர்களுக்கு அதற்குரிய எல்லா உரிமைகளையும் வழங்குவதும் அன்றைய அரபியர்களின் வழக்கம்.

முஹம்மதின் தந்தைவழி மாமியாரான ’உமைமா பின்த் அப்துல்லாஹ்’விற்கு ’பர்ரா’ என்றொரு மகள் இருந்தார். முஹம்மது தனது வளர்ப்பு மகன்  ஸைத் ’நிக்காஹ்’ செய்வதற்காக, தனது மாமியாரின் குடும்பத்தினரிடம் பெண் கேட்கிறார். ஆனால் முஹம்மதின் கோரிக்கையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முஹம்மதின் மாமி குடும்பத்தினர், ஸைத் ஒரு முன்னாள் அடிமை என்பதாலும், தங்களைப் போன்ற உயர்ந்த குறைஷி குலத்தைச் சேர்ந்தவர் இல்லையென்பதாலும் மறுத்து விடுகின்றனர். அதுமட்டுமல்ல இந் நிக்காஹ்விற்கு மணப்பெண் ’பர்ரா’ மற்றும் அவரது சகோதரருக்கும் விருப்பமில்லை.  தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் எரிச்சலடைந்த முஹம்மது அவருடைய கடவுள் அல்லாஹ்வைக் களத்தில் இறக்கினார்.

குர்ஆன் 33:36
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.

என்று அல்லாஹ் விடுத்த ஒரே ஒரு மிரட்டலில் ஒட்டுமொத்த குடும்பமும் சரணடைந்தது.  வேறுவழி தெரியாததால் முஹம்மதுவின் மாமி குடும்பத்தினர் ‘பர்ரா’வை ஜைத்திற்கு மணமுடித்துத் தர சம்மதித்தனர். தனது வளர்பு மகனது சார்பில், முஹம்மது தனது சொந்த(!) உடைமையிலிருந்து பத்து தினாரும் 60 திர்ஹம்களை ’பர்ரா’வுக்கு மஹ்ராக வழங்க பர்ரா-ஜைத் திருமணம் ஒருவழியாக நிறைவேறியது.

குர்ஆன் 33:36-ன் மேற்கண்ட விளக்கத்தை தப்ஸீர் ஜலலைனில் காணலாம். தப்ஸீர்கள் சொல்வதையெல்லாம் ஏற்கமுடியாது என்று கூறுபவர்களுக்காக அண்ணன் பீஜே தரும் விளக்கம்.

நபிகள் பல திருமணங்கள் செய்தது ஏன்?
… இந்த நிகழ்ச்சியின் மூலம் ஆரம்பம் முதலே ஸைத்(ரலி) அவர்களை மனந்து கொள்ள ஸைனப் (ரலி) அவர்கள் விம்பவில்லை என்பதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வற்புறுத்தலுக்காகவே தமக்குப் பிடிக்காதவரை மணந்து கொள்ள முன்வருகின்றார்கள் என்பதும் தெளிவாகிறது…
onlinepj.com
ஒரு முஹம்மதியப் பெண் தனது வாழ்க்கைத் துணையை சுதந்திரமாகத் தேர்ந்தெக்க உரிமை கொண்டவள் எனில், ஜைனப்பை முஹம்மது எப்படி கட்டாயப்படுத்த முடியும்?

முஹம்மதின் வளர்ப்பு மகனின் மனைவிக்கு அவரது பெற்றோர்கள் வைத்த பெயர் ‘பர்ரா’ என்பதாகும். பிற்காலத்தில் முஹம்மது ’பர்ரா’வை தனது அந்தப்புர அட்டவனையில் சேர்த்துக் கொண்டபொழுது ‘பர்ரா’ என்ற பெயரை ஜைனப் என்று திருத்தம் செய்துவிட்டார்.

தனது வாழ்க்கைத் துணைவனை தெரிவு செய்யும் உரிமையை குர்ஆன் பெண்களுக்கு வழங்கியுள்ளது என்று வாய்கிழிய ஓலமிடுபவர் சிந்திக்கட்டும்.

தொடரும்…


தஜ்ஜால்